Friday, March 2, 2018

குதிரைவாலி பிரியாணி ரெசிபி

குதிரைவாலி - 2 கப்

கேரட், பீன்ஸ் - 250 கிராம்

பீட்ரூட் - 1

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

வரமிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பற்கள்

சோம்பு - ஒரு மேசைக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

தயிர் ஆடை - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கப்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை நீளநீளமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும். பின்னர், மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக்கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். (நறுக்கி வைத்துள்ள தக்காளியில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்). குதிரைவாலியை நன்றாகக் களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். (ஒரு கப் குதிரைவாலிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும்)

பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.

காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் குதிரைவாலியைப் போட்டு, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு வைக்கவும். கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். குக்கரை ஒரு டர்க்கி டவலை நனைத்து பிழிந்து விட்டு சுத்தி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி விடவும். இதில் மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறலாம்.

கொள்ளு இட்லி

தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப்
கைக்குத்தல் அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதனை இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி!!!
இதனை கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். 

Read more at: https://tamil.boldsky.com/recipes/veg/horse-gram-idli-recipe-005024.html

Friday, October 9, 2015

சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி !

சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி !
தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தியில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை.
அகத்திக்கீரை வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொந்தரவுகளுக்கு, அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும்.
பருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம். செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும்.
அகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சினால், மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி வரும் காய்ச்சல் (Periodic fever) நீங்கும்.
அகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும்.
ஒரு பங்கு அகத்திக் கீரைச் சாறுடன், ஐந்து பங்குத் தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து, தலை உச்சியில் விரலால் தடவ, குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை (சைனஸ் பிரச்னைகள்) சரியாகும்.
சீமை அகத்திக் கீரையின் சாற்றை, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்படும் படர்தாமரை மீது தடவி வந்தால், விரைவில் குணமாகும்.
கை கால்களில் காயம் ஏற்பட்டால், அதன் மீது அகத்திக்கீரையை வைத்துக் கட்டினால், காயம் ஆறிவிடும்.
அகத்திக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் சொறி, சிரங்கு முதலான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.


பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!!!


பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!!!
1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
7. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
8. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
9. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
10. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
11. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
12. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.
13. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
14 நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
15. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
16. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
17. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
18.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்

உடல் நலத்தை பாதுகாக்கும் பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் :-


உடல் நலத்தை பாதுகாக்கும் பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் :-
இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.
பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா? - கு.சிவராமன்

கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா?
-
கு.சிவராமன்

கொசுறாய்க் கிடைப்பதால் கறிவேப்பிலைக்குக் கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். வெறும் மணமூட்டியாக இருந்து, இலையோடு சேர்ந்து வெளியேறும் பொருளாக இதனை, இத்தனை காலம் பார்த்திருந்த பலருக்கும், கறிவேப்பிலை வேம்பை போன்ற மாபெரும் மருத்துவ மூலிகை அது என்பது தெரியாது. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் அணைத்துக் காக்கும் அற்புதமருந்து... கறிவேப்பிலை.

முடி உதிர்தலைத் தடுக்க

தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்க, கறிவேப்பிலைப் பொடியை தினமும் சோற்றில் கலந்து சாப்பிடவேண்டும்.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடித்தால், அதுதான் கறிவேப்பிலைப் பொடி. கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு எடுத்துச் சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.

கண்கள் என்றால் நமக்கு ஞாபகம் வருவது கேரட் மட்டும்தான். ஆனால், கறிவேப்பிலையும் பார்வையைத் துலங்க வைக்கும், பீட்டா கரோட்டின் நிறைந்தது. பப்பாளி, பொன்னாங்கண்ணி, தினை அரிசி போன்றவையும் கண்களைப் பாதுகாப்பவையே. 

ஆன்டிஆக்ஸிடன்ட்

தோல் சுருக்கம், உடல் சோர்வு, மூட்டு தேய்தல், நரை என வயோதிகம் வாசல் கதவைத் தட்டும் அத்தனைக்கும் இன்று ஆபத்பாந்தவனாய் இருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தாம். முன்பு, மருந்துச்சீட்டில் கொசுறாக வைட்டமின் மாத்திரை இருப்பது போல, இப்போது, எந்த வியாதி எனப் போனாலும், மருத்துவர் எழுதித்தரும் சீட்டில், கடைசியாய் குத்தவைத்திருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளே. அதுவும் கொசுறாக இல்லை, கூடுதல் விலையில். ஆனால், காய்கறிக்கடையில் இலவசமாகவே பல நேரங்களில் கொடுக்கப்படும் கறிவேப்பிலையில் அதிகபட்ச ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவையும்கூட. ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும் புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன்அளிப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. அதற்காக புற்றுநோய்க்குக் கறிவேப்பிலை சட்னி மருந்து என அர்த்தம் இல்லை. அவ்வப்போது கறிவேப்பிலையைத் துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்துவந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புரண்டு புற்றாய் மாற எத்தனிப்பதைத் தடுக்கும் என்பதுதான் பொருள்.

மேற்கத்திய விஞ்ஞானம் இதைச் சொல்வதற்கு முன்னர், நம் தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப் பல வருடங்களுக்கு முன்னதாகவே பாடியுள்ளனர். அஜீரணம், பசியின்மை, பித்த நோய்கள், பேதி எனப் பல நோய்களுக்குக் கறிவேப்பிலையைச் சாப்பிடச் சொன்னவர்கள் நம் மருத்துவர்கள். இந்த அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்று நோயின் ஆரம்பகாலக் குறிகுணங்கள்.

குழந்தையை சாப்பிடவைக்க

சரியாய் சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலை இலையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து, உடன் சிறிது கல்உப்பு, சீரகம், சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து, சுடுசோறில் சாப்பிடவைக்க, பசியின்மை போகும், என்றது சித்த மருத்துவம். அன்னப்பொடி, அய்ங்காய்ப்பொடி செய்து வைத்துக்கொள்வது போல, இந்தக் கறிவேப்பிலைப் பொடியை செய்துவைத்துக்கொண்டு, சோற்றின் முதல் உருண்டையில் இப்பொடியை போட்டுப் பிசைந்து, சாப்பிட வைப்பது சீரணத்தைத் தூண்டி, பசியூட்டும். 

அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும் ரத்த கொலஸ்ட்ராலை 30 சதவிகிதமும் குறைக்கிறது எனச் சொல்கிறார்கள்.

நல்ல கொழுப்பு அதிகரிக்க

பொதுவாய் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL (HIGH DENSITY LIPO PROTIEN) –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சிதான் இதற்கு நல்ல வழி. ஆனால், கறிவேப்பிலை நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும் என்பதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் உறுதிப்
படுத்தியுள்ளனர். சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே கறிவேப்பிலையை தினம் சாப்பிட்டுவந்தால் இவ்விரு நோய்களுக்கும் செயல்படு உணவாக (functional food) ஆக இந்த மூலிகை இருக்கும்

கறிவேப்பிலை மணமூட்டி மட்டுமல்ல, நலமூட்டியும்கூட...